2,129 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவையில் 2,129 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை,
கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவி களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. இதற்கு மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 2,129 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள ஏழை- எளிய மாணவர்கள் இணையதளத்தில் உள்ள தகவலை பெற்று நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதை பார்த்து விட்டு உத்தரபிரதேசத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அங்கு ஒரு ஆண்டு மட்டுமே மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வரு கிறது. இதுபோன்று பல திட்டங்கள் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இலவச பயிற்சியும் விரைவில் அளிக்கப்பட உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வினா-விடை புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர்களே கூறி வருகிறார்கள். மேலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
எனவே மாணவர்கள் இந்த திட்டங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும். ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ்., அல்லது ஐ.எப்.எஸ். அதிகாரியாவேன் என்றோ அல்லது டாக்டராவேன் என்ற லட்சியத்துடன் படிக்க வேண்டும். அப்போது தான் அந்த லட்சியத்தை அடைய முடியும்.
கோவையில் உள்ள குளத்துப்பாளையம், தொண்டாமுத்தூர், மத்வராயபுரம், ஆலாந்துறை, செல்வபுரம் உள்பட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறை, ஆய்வக வசதி, மேஜை, நாற்காலி போன்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் எஸ்.வி.குமார், மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ரவி, நகர்நல அதிகாரி சந்தோஷ்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story