கஜா புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கஜா புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 16 Nov 2018 4:15 AM IST (Updated: 16 Nov 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் எதிரொலி காரணமாக வேதாரண்யத்தில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார்.

வேதாரண்யம்,

கஜா புயல் எதிரொலி காரணமாக வேதாரண்யத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை லேசான மழை பெய்தது.

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் அனைத்து கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள புயல்பாதுகாப்பு இல்லம், பல்நோக்கு சேவை மையம், பள்ளிகள், திருமண மண்டபங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் கடலோர மீனவ கிராமங்களில் கஜா புயலையொட்டி செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார். அப்போது அவருடன் சப்-கலெக்டர் கமல்கிஷோர், தாசில்தார் ஸ்ரீதர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

அதேபோல கோடியக்கரை முதல் நாகையில் உள்ள கடற்கரை பகுதிகளில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் டி.ஐ.ஜி. லோகநாதன், புயலினால் பாதிப்பு எதுவும் உள்ளதா என பார்வையிட்டார்.

Next Story