தூத்துக்குடியில் புகார் கொடுக்க வந்தபோது சம்பவம்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு சுமார் 60 வயதுடைய முதியவர் வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடம் புகார் கொடுப்பதற்காக வந்திருந்தார். அதற்காக அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள வரவேற்பறையில் தனது மனுவை பதிவு செய்து, பின்னர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்திப்பதற்காக காத்திருந்தார்.
அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்த பாலித்தீன் பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து, அதில் இருந்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்ததாக வரவேற்பறையில் உள்ள பெண் போலீஸ்காரரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ந்து போன அவர், அங்கு பணியில் இருந்த மற்ற பெண் போலீசாரை அழைத்து, அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். மேலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்த மற்ற போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா சிங்கிலிபட்டியை சேர்ந்த விவசாயி சங்கரநாராயணன் (வயது 60) என்பதும், அவருக்கு குளத்தூரை சேர்ந்த முத்துராஜ் என்பவர் ரூ.31 லட்சத்து 24 ஆயிரம் தராமல் ஏமாற்றியதுடன் சிலரை வைத்து மிரட்டி வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்க வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் எட்டயபுரம் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனுக்கள் கொடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது சங்கரநாராயணனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அதன் பின்னர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிக படியான போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர். கடந்த சில மாதங்கள் வரை பலத்த சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி விவசாயி ஒருவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story