நெல்லையில் பரபரப்பு: கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை கல்லறை தோட்டத்தில் பிணமாக கிடந்தார்


நெல்லையில் பரபரப்பு: கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை கல்லறை தோட்டத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 16 Nov 2018 4:45 AM IST (Updated: 16 Nov 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் முருகன். (வயது 54) தி.மு.க. பிரமுகரான இவர் சிவந்திபட்டி கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இவர் குடும்பத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டி கார்த்திகை நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து முருகன் திடீரென்று காணாமல் போனார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் எங்கு சென்றார்? என்று விசாரணை நடத்தி, அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ்நகர் கல்லறை தோட்டத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் கல்லறை தோட்டத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்தவர் காணாமல் போன முருகன் என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த முருகனின் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினர் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக முருகன் வீட்டை விட்டு வெளியேறி கல்லறை தோட்டத்துக்கு சென்று, அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கூட்டுறவு சங்க தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story