வாசுதேவநல்லூரில், தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை-பரபரப்பு


வாசுதேவநல்லூரில், தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை-பரபரப்பு
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 7:14 PM GMT)

வாசுதேவநல்லூரில் தொழிலாளி மின்கம்பத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 43). தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்துக்கு மேற்கே வயல்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்ஒயரில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். இதையடுத்து அவரது உடல் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்ணனின் சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

பின்னர் கர்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்த கர்ணனுக்கு ராணி (38) என்ற மனைவியும், தீபக் (19) என்ற மகனும், முத்துமணி (18) என்ற மகளும் உள்ளனர்.

தொழிலாளி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story