இடைத்தேர்தல் நடந்தால் வேட்புமனுக்களை நிராகரிக்க சதித்திட்டம் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
தமிழகத்தில் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் வேட்புமனுக்களை நிராகரிக்க சதித்திட்டம் நடப்பதாக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
பரமக்குடி,
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முத்தையா தகுதி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளார். இந்நிலையில் தொகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அ.தி.மு.க. அரசு செய்யவில்லை என்பதை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் வருகிற 20-ந்தேதி பரமக்குடி லேனா மகால் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதில் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொள்கிறார்.
இதனையொட்டி ஆலோசனை கூட்டம் பரமக்குடி ராஜா மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முத்தையா, மாவட்ட செயலாளர் ஆனந்த், அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாநில மகளிர் அணி இணை செயலாளர் கவிதா சசிகுமார், மருத்துவ அணி இணை செயலாளர்கள் டாக்டர் கபிலன், சந்திரமோகன், இலக்கிய அணி இணை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் வேந்தை சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குட்கா, உணவுத்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத்துறை என அனைத்து துறைகளிலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நீதிமன்றமே வழக்கை விசாரித்து மேலும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ஆகையால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 பேரை மாற்ற வேண்டும் என நாங்கள் கவர்னரிடம் மனு கொடுத்தோம். இதனால் எங்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வீதம் கொடுக்க திட்டம் தீட்டி உள்ளனர். பொதுமக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்களிப்பார்கள். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும்.
ஜெயலலிதாவால் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தது சரியா இடைத்தேர்தலுக்குப் பிறகு கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும். 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் புதிய ஆட்சி அமையும்.
தற்போது உள்ள அ.தி.மு.க. அரசுக்கு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் இந்த ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்வார்கள். ஆகையால் குறிப்பிட்ட 8 தொகுதிகளில் தேர்தலை நிறுத்தலாம், அல்லது இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் நாங்கள் செய்யும் வேட்புமனுவை நிராகரிக்கலாம். அதற்கான சதித்திட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் போகலூர் ராஜாராம் பாண்டியன், பரமக்குடி செந்தில்குமார், நயினார்கோவில் சிவகுமார், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீஸ்வரன், கடலாடி பத்மநாபன், சாயல்குடி பச்சைகண்ணு, கமுதி வடக்கு முத்துராமலிங்கம், நகர் செயலாளர்கள் கீழக்கரை சுரேஷ், முதுகுளத்தூர் காட்டுராஜா, அபிராமம் குமணன், ராமேசுவரம் அர்ச்சுனன், மண்டபம் பேரூராட்சி செயலாளர் களஞ்சியம், ராமநாதபுரம் ரஞ்சித், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மணல் சந்திரசேகர், திருசாய் நிறுவனங்களின் இயக்குனர் குணசுந்தரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நயினார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் பலர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் அ.ம.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story