குண்டும், குழியுமான நரிக்குடி சாலை வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமாக காணப்படும் நரிக்குடி சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் இருந்து நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கருவக்குடி, முள்வாய்க்கரை, அ.முக்குளம் வழியாக நரிக்குடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்புவனத்தில் இருந்து இந்த சாலையின் முகப்பில் ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், டீக்கடைகள், மருந்து கடைகள், பேன்சி ஸ்டோர் என்று பல கடைகள் உள்ளன.
இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை குண்டும், குழியுமாக தற்போது காணப்பட்டு வருகிறது.
இதனால் அந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்வோர் சிரமப்படும் நிலை உள்ளதோடு, அடிக்கடி விபத்தும் நடந்து வருகிறது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாக நயினார்பேட்டை, மாங்குடி, அல்லிநகரம், பழையனூர், தவத்தாரேந்தல், தச்சனேந்தல், புல்வாய்க்கரை உள்பட 20-க்கும் மேற்பட்ட நகர் பஸ்களும், மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து பல புறநகர் பஸ்களும் சென்று வருகிறது. மேலும் செங்கள்சூளை லாரிகள், விறகு லாரிகளும் இந்த சாலையில் தொடர்ந்து சென்று வருகிறது. இந்த சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த பணிக்காக கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் சிறிய அளவில் காணப்பட்டு வரும் இந்த பள்ளங்கள் தற்போது பெரிய அளவு பள்ளங்களாக மாறி விட்டன. இதனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் இந்த சாலையில் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுதவிர மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சிறிய குளம்போல் காட்சியளிக்கிறது.
எனவே நரிக்குடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story