திண்டுக்கல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.5 கோடி நகைகள் தப்பின


திண்டுக்கல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.5 கோடி நகைகள் தப்பின
x
தினத்தந்தி 16 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.5 கோடி நகைகள் தப்பின.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு நகை கடன், பயிர் கடன் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இந்தநிலையில், நேற்று காலை வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோரும் வந்து வங்கியை பார்வையிட்டனர். கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் வங்கிக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

முதலில் கொள்ளையர்கள் வங்கியின் முன்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்துள்ளனர். பின்னர், வங்கியின் பூட்டை உடைத்து லாக்கர் இருக்கும் அறைக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள மற்றொரு கேமராவையும் உடைத்துவிட்டு லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் அங்கிருந்த நகை எடை போடும் எந்திரத்தை மட்டும் தூக்கி சென்றுள்ளனர்.

லாக்கரை உடைக்க முடியாததால், அங்கிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் தப்பியது. கேமராவை உடைத்தாலும், அதில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி உள்ளன. அதனை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து வங்கி செயலாளர் முருகேசன் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story