அலையில்லாத அதிராம்பட்டினம் கடல் பீதியில் உறைந்த கிராம மக்கள்


அலையில்லாத அதிராம்பட்டினம் கடல் பீதியில் உறைந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 9:46 PM GMT)

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அலையில் லாததால் கடலோர கிராம மக்கள் பீதியில் உறைந்தனர்.

அதிராம்பட்டினம்,

கஜா புயல் கரையை கடக்கும் வேளையில் தஞ்சை மாவட்டத்தில் 20 செ.மீ. மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது. நேற்று மாலை புயல் கரையை நோக்கி வேகமாக நகர தொடங்கியபோது தஞ்சை மாவட்ட கடற்கரை கிராமங் களான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

கடலில் அலைகள் இல்லை. குளம்போல அமைதியாக காணப்பட்டது. கடலில் நிலவிய பேரமைதியால் கடலோர கிராமங்களில் ஒருவித பதற்றம் இருந்தது. கிராம மக்கள் பீதியில் உறைந்து இருந்தனர். தங்களுடைய கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது, வலைகளை பாதுகாப்பது, ஆடு, மாடுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைப்பது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என மீனவ கிராம மக்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.

புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி என்று கூறுவார்கள். அதை போன்று கடல் இருந்ததால் புயலின் வேகம் கடுமையாக இருக்குமோ என்ற அச்சமும் கிராம மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தஞ்சை கடலோர காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புயலால் பாதிப்பு ஏற்பட்டால் கிராம மக்களை எவ்வாறு பாதுகாப்பது? என போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார். இதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story