தாம்பரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


தாம்பரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Nov 2018 3:22 AM IST (Updated: 16 Nov 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் காந்தி நகர் சாலப்பா தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 18). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் விஜயிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் விஜயை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பி ஓடினர்.

அரிவாளால் வெட்டியதில் விஜய்க்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தாம்பரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
விஜயும் அதே பகுதியை சேர்ந்த பத்ரி என்ற விஜயகுமாரும் நண்பர்கள். பத்ரி, பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மாணவியின் உறவினர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்ரியை ஏற்கனவே கண்டித்தது உள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு விஜய் தனது வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் பத்ரியின் காதல் குறித்து விசாரித்ததோடு, பத்ரியின் முகவரியையும் கேட்டுள்ளனர். அதற்கு, விஜய் தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story