விதிகளை மீறி நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் விரும்புகிறார் கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு


விதிகளை மீறி நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் விரும்புகிறார் கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Nov 2018 5:14 AM IST (Updated: 16 Nov 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறி நிதிஒதுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி விரும்புகிறார் என்று கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நேரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதி கேட்டு கோப்பு அனுப்பினால் அதனை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்புகிறார் என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து தவறான தகவல்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார். அதற்கு கவர்னர் அலுவலகம் தொடர்ந்து பதில் கொடுத்து வருகிறது. மேலும் நிதிகளை கையாளுவதில் விதிகளை பின்பற்றி வருகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதால் வழங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவ்வாறு வழங்கும்போது நாம் விதிகளை மீற முடியும்.

அதைத்தான் முதல்-அமைச்சர் விரும்புகிறார். ஆனால் நிர்வாகம் அதை அனுமதிக்காது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால் அதனை பொதுநிதி சட்டத்தின்படி தான் வழங்க முடியும். பல நிறுவனங்கள் கண்காணிப்பு இன்றி நிதியை அனுமதிக்க வேண்டும் என்று கேட்கின்றன. அது சாத்தியமில்லை.

பஞ்சாலைகளை மூட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என கூறுவதும் தவறான குற்றச்சாட்டு. நான் அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். நான் புதுவையின் கவர்னர். நிர்வாகி என்ற முறையில் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகிறேன்.

நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தால் அதற்கு நிர்வாக அதிகாரியே முழு பொறுப்பாவார். உண்மையை முதல்-அமைச்சர் ஏன் மக்களிடம் சொல்வதில்லை? நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணியை ஏன் செய்வதில்லை? அரசே அனைத்து விதிகளையும் மீறுவதால், அந்த மீறல்களை நியாயப்படுத்த முடியாது. விதிகளை மீறி நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விரும்புகிறார்.

முதல்-அமைச்சர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதில்லை. கடந்த கால தவறுகளை சரி செய்வதற்கு நாம் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும். சரியான விதிமுறையை ஏன் இப்போது பின்பற்றக்கூடாது? கடன் வாங்கி திருப்பிச் செலுத்துவதற்கு மாறாக ஏன் சரியாக செயல்பட கூடாது. கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரவும், ஏரி, குளங்களில் நீர் கொண்டுவந்து சேமிக்கும் வாய்க்கால்களை தூர்வாரவும் நம்மிடம் பணம் இல்லை.

எனவே அதனை தூர்வார ஆதரவு அளிக்கும் மக்களுக்கு நன்றி. ஆதரவாளர்கள் இல்லை என்றால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருந்தால் தற்போது வெள்ளம் ஏற்பட்டு இருக்கும். தூர்வாரியதன் காரணமாக தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்பாசன வசதி பெற்றுள்ளது. குற்றம் சொல்வதற்குப் பதிலாக முதல்-அமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story