கஜா புயல் எச்சரிக்கை எதிரொலி: 70 முகாம்களில் 5 ஆயிரம் பேர் தஞ்சம் காரைக்காலில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
காரைக்கால் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 70 நிவாரண முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு உணவு வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால்,
காரைக்காலில் புயல் எச்சரிக்கையையொட்டி மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா தலைமையில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் காற்று வேகமாக வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
மீனவர்கள் நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 380 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்திலும், சுமார் 800 பைபர் படகுகள், காரைக்கால் அரசலாற்றங்கரையோரமும், பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டதாக கிராம பஞ்சாயத்தார் உறுதி செய்தனர்.
புயல் பாதிப்பு ஏற்படும் என கருதுபவர்கள் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கலாம். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் மற்றும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். இதையொட்டி காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 70 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
காரைக்காலில் நேற்று பகல் 2 மணி முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை அனுமதிக்காமல், கடலோர காவல்நிலைய போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக காலை முதல் கடற்கரை பகுதியும், கடைவீதிகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா ஆகியோர் கூறியதாவது:-
புதுச்சேரியில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். தஞ்சமடையும் 27 கடலோர முகாம்கள் உள்பட 70 நிவாரண முகாம்களில் உணவு வழங்க, 16 டன் அரிசி, 6 டன் காய்கறி, 4 டன் மளிகை சாமான்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில், அனைத்து மீனவ கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பாக இருக்கவேண்டிய முறை குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காரைக்கால் மார்க் துறைமுகத்தில் பிற்பகல் 2 மணிக்கு மேல், மிகவும் ஆபத்தானது என குறிக்கும் 9-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Related Tags :
Next Story