புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு மையத்தில் நாராயணசாமி ஆய்வு


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு மையத்தில் நாராயணசாமி ஆய்வு
x
தினத்தந்தி 16 Nov 2018 5:31 AM IST (Updated: 16 Nov 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு மையத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

கஜா புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து புதுவை அரசு சார்பில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை ஏழை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சின்ன வாய்க்காலை பார்வையிட்டார். அங்கிருந்து முத்தியால்பேட்டை சென்று அங்குள்ள வடிகால் வாய்க்காலை பார்வையிட்டார். தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மீட்பு மைய அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு கஜா புயல் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்தார். அப்போது புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அங்கிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, மின்துறை அலுவலகங்களுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், புதுவையில் புயல் பாதிக்கும் போது பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர் ஷாஜகான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் கஜா புயலின் தாக்கம் அதிகம் இல்லாவிட்டாலும், மழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையின்போது நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை சமுதாய நலக்கூடங்கள், பள்ளிகளில் தங்க வைத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றவும், தடையின்றி மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. . விவசாய நிலங்களில் தேங்கும் நீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து 16 குழுக்கள் அமைத்து மழை பாதிப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். காரைக்கால் பகுதியில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மீட்பு பணிகள் மேற்கொள்ள புதுவையில் இருந்து ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை காரைக்காலுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story