காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது


காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது:‘கஜா’ பீதியால் மெரினா கடற்கரை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 16 Nov 2018 12:06 AM GMT (Updated: 16 Nov 2018 12:06 AM GMT)

‘கஜா’ புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லையென்றாலும், சென்னையில் மெல்லிய தாக்கத்தை ‘கஜா’ ஏற்படுத்தியது. காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது. ‘கஜா’ பீதியால் கடற்கரை வெறிச்சோடியது.

சென்னை,

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது.

அந்த கணிப்பு பொய்யாகி, நாகப்பட்டினத்திற்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டு, தற்போது கடலூர்-பாம்பன் இடையே நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் நேற்று மாலை வரை புயல் திசை மாறிக்கொண்டே வந்தது.

ஏற்கனவே ‘தானே’, ‘வார்தா’ ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ‘கஜா’ புயல் என்னபாடு படுத்துமோ? என்ற அச்சம் மேலோங்கி இருந்தது. ‘கஜா’ புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும், அதன் பாதிப்பு சென்னை நகரிலும் எதிரொலித்தது.

சென்னையின் நேற்றைய அதிகாலை பொழுதே மழையுடன் தான் விடிந்தது. சடசடவென மழையுடன் ஆரம்பித்து, சில நிமிடங்களில் நின்று போவதும், பின் மழை பெய்வதுமாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாகவே இருந்தது. சில இடங்களில் சூறாவளி காற்று வீசியது.

அதே நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் மதியத்திற்கு மேல் வானில் கரு மேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. வானில் மேகங் கள் சூழ்ந்ததால், பகல் பொழுது இரவு போலவே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து, மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வைத்தன. பெற்றோர்களும் பள்ளிக்கு படையெடுத்து தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரை, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டன.

அதேநேரத்தில் சில தனியார் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. ஆட்டோ, கார்களும் நேற்று மதியத்திற்கு மேல் பெருமளவில் இயக்கப்படவில்லை. இதனால் சென்னை நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

‘கஜா’ புயல் அச்சம் காரணமாக, மெரினா கடற்கரை நேற்று காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதால், படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பட்டினப்பாக்கம் முதல் காசிமேடு வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்தது. கடல் அலையை ரசிக்க வந்த ஒரு சிலரையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மெரினா கடற்கரையில் காலை முதலே பலத்த காற்று வீசி வந்ததால் கடற்கரை உள்புற சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் கீழே விழுந்தன. காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் தாழங்குப்பம் சின்னங்குப்பம் போன்ற பகுதிகளில் கடல் அலை வழக்கத்தை விட பெரும் சீற்றத்துடன் சுமார் 1 மீட்டர் உயர அளவுக்கு எழுந்து, ஆர்ப்பரித்தது. அலையின் ஆர்ப்பரிப்பை இளைஞர்கள் சிலர் ‘செல்பி’ எடுக்க முயன்றனர். அவர்களை சமூக ஆர்வலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

‘கஜா’ புயல் குறித்த தகவல்கள் சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திர ரத்னு ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு மீட்பு நடவடிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நேற்று பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு, டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் வயர்கள் செல்லும் இடங்களில் உள்ள மரங்கள் வெட்டி, அகற்றப்பட்டன.

எத்தனையோ புயல் தமிழகத்திற்கு வந்திருக்கிறது, ஆனால் ஒரு முறை கூட இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சென்னை வந்து ஆலோசனை மேற்கொண்டதில்லை. ஆனால் நேற்று இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் ரமேஷ் வந்திருந்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ‘கஜா’வை பொறுத்தவரையில் சென்னையில் பாதிப்பு மெல்லிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் ரமேஷ் சென்னை வரவழைத்த பெருமை ‘கஜா’வையே சேரும்.


Next Story