ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலூர் வறட்சி மாவட்டமாக மாறிவிடும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் குறித்து பேசினர். விவசாயிகள் பேசியதாவது:–
தடுப்பணைகள்பேரணாம்பட்டு பகுதியில் மான், காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் இன்சூரன்ஸ் பணம் வருவதில்லை. 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாயத்தில் என்னென்ன பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை தெரிவிக்க வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திரமாநில அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டி உள்ளது. தற்போது 21 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.41 கோடி ஒதுக்கி இருக்கிறது. 8 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்துள்ளது. அதில் தேங்கும் தண்ணீரை 100 ஏரிகளுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி உள்ளது. இதேநிலை நீடித்தால் பாலாற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.
ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்காவிட்டால் வேலூர் வறட்சி மாவட்டமாக மாறிவிடும். இதனால் பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும். விவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்த எடுத்துவரும் நடவடிக்கையை தடுக்கவேண்டும். பாலாற்றில் புதிய மணல்குவாரிகள் அமைக்கப்பட இருக்கிறது. ஏழைகளுக்கு மணல் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விபத்து நடந்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டால் அனைத்து சான்றுகள் கொடுத்தாலும் இன்சூரன்ஸ் கிடைப்பதில்லை. இந்த திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது.
ஆண்டியப்பனூர் அணை கால்வாய்கள் தூர்ந்துவிட்டது. அதை சரிசெய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலவையில் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தின் அருகிலேயே தனிநபர் ஒருவர் நெல் கொள்முதல் செய்கிறார். இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் கூறினால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. விவசாய பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது சில போலீசார் மாமூல் வசூல் செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கூறினர்.