தமிழக ஆட்சிக்கு முடிவு கட்ட 234 தொகுதிகளிலும் மக்கள் காத்திருக்கிறார்கள் குடியாத்தத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு


தமிழக ஆட்சிக்கு முடிவு கட்ட 234 தொகுதிகளிலும் மக்கள் காத்திருக்கிறார்கள் குடியாத்தத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 7:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆட்சிக்கு முடிவு கட்ட 234 தொகுதிகளிலும் மக்கள் காத்திருக்கிறார்கள் என்று குடியாத்தத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

குடியாத்தம், 

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நலத்திட்டங்களை புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளருமான சி.ஜெயந்திபத்மநாபன் தலைமை தாங்கினார். குடியாத்தம் ஒன்றிய செயலாளர் எம்.கே.பூபாலன், பேராணம்பட்டு ஒன்றிய செயலாளர் ஆர்.பிரபு, பேரணாம்பட்டு நகர செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர செயலாளர் இ.நித்தியானந்தம் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர்கள் ஆர்.பாலசுப்பிரமணி, என்.ஜி.பார்த்திபன், ம.கலையரசு, உயர்மட்ட குழு உறுப்பினர் சி.ஞானசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்த வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சியை உருவாக்கி கொடுத்த பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இந்த ஆட்சியாளர்கள் துரோகம் செய்துவிட்டனர்.

ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றாமல் இந்த ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதியை சேர்ந்த மக்களும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்றுதான் தங்களை எதிர்க்கிறது, அதனை அடக்கி, ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள இந்த ஆட்சி எப்போது தேர்தல் வந்தாலும் முடிந்து விடும். சாதி, மத வேறுபாடற்ற ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் அமைக்க முடியும். 18 தொகுதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் இனிவரும் காலங்களில் குக்கர் சின்னம்தான் வெற்றி பெறும்.

இலவசங்களை கேலி செய்து படம் எடுக்கிறார்கள். தமிழகத்தில் விவசாயிகள், தினக்கூலிகள், வறுமை கோட்டிற்குகீழ் என பலதரப்பு மக்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட, அவர்களின் தேவைகளுக்கு இலவச திட்டங்கள் உதவிகரமாக உள்ளது. கேலி செய்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு அளித்த இலவச திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் ஏழைகளே இல்லை என்ற நிலை வரும்வரை இலவச திட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் மீது பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

கஜா புயலால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள். நானும் அவர்களுக்கு உதவும் வகையில் செல்ல இருப்பதால் சென்னை பெரம்பூர், திருப்பூர், பரமகுடி, மானாமதுரை ஆகிய இடங்களில் நடைபெறுவதாக இருந்த போராட்டங்கள் தள்ளி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் எதிரியாக இருந்தாலும் கஜா புயலையொட்டி அவர்கள் எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டுகிறேன். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பாண்டுரங்கன், வடிவேல், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் செஞ்சி எம்.வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வி.டி.சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட எப்போது தேர்தல் வரும் என காத்திருக்கிறார்கள். அது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும். மக்கள் மனதில் குக்கர் சின்னம் உள்ளது. 18 தொகுதிக்கான மேல்முறையீடுக்கு 90 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்த நிலைப்பாடு எடுக்கப்படும்’ என்றார்.


Next Story