மாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி


மாவட்டத்தில் ‘கஜா’ புயலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 Nov 2018 4:30 AM IST (Updated: 16 Nov 2018 10:12 PM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பண்ருட்டி, 

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது கடலூர் மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையின்போது கடலூர் மாவட்டத்தில் தனித்தனி சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(வயது 38). தொழிலாளி. இவருடைய மனைவி மலர்(34). இவர்களுக்கு சாரதி என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் நள்ளிரவு ரங்கநாதன் நெய்வேலிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

செருத்தங்குழி-பாப்பங்கொல்லை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து ரங்கநாதன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் உள்ள வேப்பமரத்தின் கீழ் நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கி நின்றார். அப்போது வீசிய பலத்த காற்றினால் அந்த வேப்ப மரம் சாய்ந்து ரங்கநாதனின் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ரங்கநாதனை மீட்டு மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ரங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ராஜலிங்கம், கிராமநிர்வாக அலுவலர் வஜ்ரவேல், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரைய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

வேப்பூர் அருகே உள்ள மே.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). மண்பாண்ட தொழிலாளி. இவருடைய மனைவி அய்யம்மாள்(35). இவர்களுக்கு சபரி, மகேஸ்வரி என்ற 2 மகள்களும், மாதேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக அப்பகுதியில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டில் அடுக்கி வைத்திருந்த ஹாலோபிளாக் கற்கள் சரிந்து ராமச்சந்திரன் மற்றும் அய்யம்மாள் மீது விழுந்தது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். ராமச்சந்திரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த வேப்பூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மின்சாரம் தாக்கியது

குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான்வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ஆனந்தன்(41). கார் டிரைவர். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கஜா புயல் தாக்கத்தின் காரணமாக நேற்று முன்தினம் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஆனந்தன் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேறுவதற்காக வைத்திருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே ஆனந்தன் வெளியே வந்து அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே தொங்கிக்கொண்டிருந்த மின்வயர் ஒன்று ஆனந்தனின் மீது உராய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story