வடலூர் அருகே பலத்த மழை பரவனாற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது


வடலூர் அருகே பலத்த மழை பரவனாற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 16 Nov 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

வடலூர் அருகே பெய்த பலத்த மழையால் பரவனாற்றின் கரை உடைந்துஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

வடலூர், 

வடலூர் அருகே உள்ள மேலகொளக்குடியில் பரவனாறு செல்கிறது. மழைக்காலங்களில் மேலகொளக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரும், என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் இந்த பரவனாற்றுக்கு வந்து சேரும். பரவனாற்றின் கரை பலவீனமடைந்து காணப்பட்டதால், அதனை சீரமைத்து கரையை உயர்த்தி அமைக்கும்படி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் கரையை உயர்த்தவோ, பலப்படுத்தவோ எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் காரணமாக நேற்று முன்தினம் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. நெய்வேலி, வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பரவனாற்றுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதற்கிடையே என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்தும் மழைநீர் வெளியேற்றப்பட்டதால், பரவனாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் பரவனாற்றின் கரையில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, அருகே உள்ள மேலகொளக்குடி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந் தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே இதுபற்றி சிதம்பரம் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பரவனாற்று கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இதையடுத்து மணல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக பரவனாற்றின் கரை உடைப்புகள் சரிசெய்யப்பட்டது. இதனால் ஊருக்குள் புகுந்த தண்ணீர் குறைந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி, கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் பரவனாற்றின் கரை கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும், மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Next Story