குடிபோதையில் தகராறு: பீர்பாட்டிலால் தாக்கி, ‘பார்’ மேற்பார்வையாளர் கொலை நண்பர் கைது


குடிபோதையில் தகராறு: பீர்பாட்டிலால் தாக்கி, ‘பார்’ மேற்பார்வையாளர் கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 16 Nov 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் பார் மேற்பார்வையாளர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பார் ஊழியரான அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மாஞ்சூரைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவர், சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், ராஜூவ் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் தங்கி, மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவருடன், அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பரான தர்மராஜ் (28) என்பவரும் தங்கி, வேலை செய்து வந்தார்.

தீபாவளி அன்று சத்யராஜ், தலையில் காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்களிடம், நடந்து சென்றபோது வாகனம் மோதியதில், கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி, சிகிச்சை பெற்றுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

சில நாட்கள் கழித்து அவருக்கு தலையில் வலி அதிகமானது. இதனால் அவரது உறவினர்கள், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனையில் சத்யராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரணை செய்தபோது, தீபாவளி அன்று பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர் தர்மராஜ், பீர்பாட்டிலால் தனது தலையில் தாக்கியதாக கூறினார்.

இதற்கிடையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரவாயல் போலீசார் சிவகங்கை சென்று, சத்யராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் தலைமையில் தனிப்படை அமைத்து தர்மராஜை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார், தர்மராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று சத்யராஜ், தர்மராஜ் இருவரும் டாஸ்மாக் பாரை மூடிவிட்டு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் பட்டாசு வெடித்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், அருகில் இருந்த பீர் பாட்டிலால் சத்யராஜின் தலையில் ஓங்கி தாக்கினார். இருவரும் போதையில் இருந்ததால் சத்யராஜ் நடந்த விவரத்தை யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில், வாகனம் மோதி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி சிகிச்சை பெற்றுவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

அங்கு மீண்டும் தலையில் வலி அதிகமானதால் அவரது உறவினர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் உயிரிழந்துவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான தர்மராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story