இளம்வயது திருமணங்களை தடுக்க கிராம அளவில் குழுக்கள் கலெக்டர் உத்தரவு
இளம்வயது திருமணங் களை தடுக்க வட்டார அளவிலும், கிராம அளவிலும் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, சைல்டு லைன் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ள இளம்வயது திருமணம், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடுத்து நிறுத்தப்பட்ட இளம்வயது திருமணங்கள் போன்றவை குறித்த விவரங் களை கலெக்டர் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசும்போது கூறியதாவது:-
மக்களிடம் போதிய விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவு இல்லாததால் பெண் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மன நலனை கருத்தில் கொள்ளாமல் இளம்வயது திருமணம் நடத்தப்படுகிறது. சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தொழிலாளர் நலத்துறை, சைல்டு லைன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இளம்வயது திருமணங்களை தடுத்திட போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
இளம்வயது திருமணங் களை தடுக்க வட்டார அளவிலும், கிராம அளவிலும் குழு அமைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மகளிர் ஊர் நல அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோருக்கு பணி மற்றும் பொறுப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழுவில் இடம்பெற்றுள்ள குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் உரிய விவரங்களை அங்கன்வாடி மையங்களில் உள்ள விளம்பர பலகைகளில் ஒட்ட வேண்டும்.
3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., போலீஸ் துணை சூப்பிரண்டு, தாசில்தார் ஆகியோர் தலைமையில் குழந்தை திருமண தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள், வழிபாட்டு தலங்கள், சமுதாயக் கூடங்கள், தனிநபர் இல்லங்களில் குழந்தை திருமணங்கள் குறித்த தகவல் கிடைத்தால் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சைல்டு லைன் அமைப்பின் இயக்குனர் முகமது ஷேக் இப்ராகிம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story