திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறைகள் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு


திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறைகள் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:15 PM GMT (Updated: 16 Nov 2018 7:15 PM GMT)

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

சின்னாளப்பட்டி,

திண்டுக்கல்-மதுரை இடையே அம்பாத்துரை அருகே முருகன்பட்டி என்ற இடத்தில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மழைக்காலத்தில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுவது வழக்கம். இதனை கண்காணிப்பதற்காக அங்கு 24 மணி நேரமும் ரெயில்வே ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கஜா புயல் காரணமாக நேற்று காலை 8 மணியளவில் அந்த பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக மலைப்பகுதியில் புதிதாக அருவிகள் உருவாகி தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. அப்போது, திடீரென பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. மேலும், 2 இடங்களில் லேசான மண்சரிவும் ஏற்பட்டது.

இதனை ரோந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் பார்த்து, உடனடியாக திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ரெயில்நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்தநேரத்தில் நெல்லையில் இருந்து ஈரோடு நோக்கி வந்த பயணிகள் ரெயில் முருகன்பட்டி அருகே நிறுத்தப்பட்டது. அதன்பின்னால் வந்த நெல்லையில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கொடைரோட்டில் நிறுத்தப்பட்டன. இதேபோல திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும் திண்டுக்கல்லில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து, விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தினர். சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு, அந்த வழியாக ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. தண்டவாளத்தில் விழுந்த மண்ணை முற்றிலுமாக அப்புறப்படுத்த 2 நாட்கள் ஆகும் என்று ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சின்னாளப்பட்டி அருகே உள்ள அமலிநகரில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் புகுந்தது. அப்போது, சுரங்கப்பாதை அருகே தண்டவாளம் 1 அடிக்கும் கீழே இறங்கியது. இதை அந்த வழியாக வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததால், அவர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை சரிசெய்தனர். அந்த நேரத்தில் ரெயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story