தாயாரை பார்க்க கணவர் அனுமதி மறுப்பு: பெண், 6 வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை நாமக்கல் அருகே சோகம்


தாயாரை பார்க்க கணவர் அனுமதி மறுப்பு: பெண், 6 வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை நாமக்கல் அருகே சோகம்
x
தினத்தந்தி 17 Nov 2018 4:45 AM IST (Updated: 17 Nov 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே, தாயாரை பார்க்க கணவர் அனுமதிக்காததால் பெண், 6 வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் அடுத்த திண்டமங்கலம் அருகே உள்ள சுப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 35). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி சங்கமேஸ்வரி (30) என்ற மனைவியும், ரமிதா (6) என்ற மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் சங்கமேஸ்வரி தனது சொந்த ஊருக்கு சென்று தனது தாயாரை பார்த்து வருவதாக ஜெயராஜிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் லாரியில் பெங்களூருவுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சங்கமேஸ்வரி, தனது 6 வயது மகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவரும் தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சங்கமேஸ்வரியும், குழந்தை ரமிதாவும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே ஜெயராஜின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை கண்ட அப்பகுதியினர், வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது சங்கமேஸ்வரியும், அவரது குழந்தை ரமிதாவும் தீயில் கருகி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நல்லிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், சங்கமேஸ்வரி, திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையில் உள்ள தனது தாயார் சுந்தராம்பாளை பார்க்கச்செல்ல முடியாத காரணத்தால் கவலையில் இருந்தது தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக சங்கமேஸ்வரி, குழந்தையை எரித்துக்கொன்று, தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜெயராஜிக்கும், சங்கமேஸ்வரிக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால், இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் கிராந்தி குமார் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 6 வயது மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story