சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றிய 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு


சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றிய 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 17 Nov 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றிய 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து எனது உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓசூர் சிப்காட், கெலமங்கலம் ரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த ஒரு தொழிற்சாலை, ஒரு கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் ஒரு வெள்ளரிக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகிய மூன்று தொழிற்சாலைகள் விதிகளை மீறி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவது கண்டறியப்பட்டது.

அதன் அடிப்படையில் அந்த மூன்று தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படும். கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றம் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story