ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 7:49 PM GMT)

ராசிபுரம் அருகே, அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

ராசிபுரம், 

ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில் உள்ள அலவாய்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆயா கோவில் என்று அழைக்கப்படும் அழியா இலங்கை அம்மன் கோவில். 400 ஆண்டுகள் பழமையும், புகழும் வாய்ந்த இந்த கோவில் வடக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ளது.

இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அழியா இலங்கை அம்மன் கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சாமி புற்றுக்கண் மீது பெண் கால் பாதங்கள் போன்ற வடிவத்தில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை இரவு முதல் பண்டிகை தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குள் முடிந்துவிடும்.

இந்த கோவில் திருவிழாவின் போது பொங்கல் வைக்கும் பெண்கள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 நாட்களும் விரதம் இருப்பார்கள். மேலும் அந்த 3 நாட்களிலும் கூனவேலம்பட்டி புதூர், கூனவேலம்பட்டி, பாலப்பாளையம், குருக்கபுரம், ஆண்டகளூர்கேட் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்தால் அந்த குடும்பத்தில் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்தமாட்டார்கள். அரிசி சோறும் சாப்பிடமாட்டார்கள். அதற்கு பதிலாக கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்ற உணவு வகைகளைத்தான் சாப்பிடுவது வழக்கம்.

இவ்வளவு சிறப்பும், புகழும் வாய்ந்த கோவில் திருவிழா இந்த ஆண்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு வரை நடந்தது. விழாவில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. நேற்று மழை பெய்தது. இருந்தாலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்திருந்தனர்.

அதேபோல் கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், பாலப்பாளையம், அத்தனூர், மசக்காளிப்பட்டி, ராசிபுரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்துவிட்டு சென்றனர். மழை கொட்டியதால் பெண்கள் சிலர் குடையை பிடித்துக்கொண்டு நின்றனர்.

விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேற்று முன்தினம் இரவு முகாமிட்டிருந்தார். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் அம்மனை தரிசித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது ஆர்வத்துடன் கரும்பு வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.

Next Story