நம்பியூர் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் சாவு: கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு


நம்பியூர் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் சாவு: கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 17 Nov 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் இறந்ததை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் கோபால் நம்பியூர் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

நம்பியூர்,

நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் கோமாரி நோய் தாக்குதல் காரணமாக 150–க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து உள்ளன.

இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள வெட்டையம்பாளையம், காராப்பாடி, ஒட்டர்கரட்டுபாளையம் ஆகிய பகுதியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் கோபால், மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் நம்பியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘பல இடங்களில் கால்நடை டாக்டர்கள் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் கால்நடைகள் இறப்பு அதிகரித்து விட்டது,’ என குற்றம்சாட்டினர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பதில் அளித்து முதன்மை செயலாளர் கோபால் பேசுகையில், ‘கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அனைத்து கால்நடைகளும் கோமாரி நோயால் பாதிக்கப்படவில்லை. எனினும் இறந்துபோன கால்நடைகள் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்சிகிச்சையால் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளன,’ என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இறந்த கால்நடைகளுக்கு உண்டான இழப்பீடு தொகை வழங்குவது பற்றி இறந்த மாடுகளின் உடற்கூறு ஆய்வறிக்கைக்கு பிறகு முடிவு செய்யப்படும்,’ என்றார். மேலும் கால்நடை உதவி டாக்டர்கள் நியமனத்தில் முறைகேடு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, அவர் அதுபற்றி கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

கோமாரி நோயால் 150–க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துவிட்ட நிலையில், ஆய்வு செய்த கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் கோபால், ‘கோமாரி நோயால் ஒரு சில கால்நடைகள் மட்டுமே இறந்து உள்ளதாக கூறியது,’ நம்பியூர் பகுதி விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Related Tags :
Next Story