வால்பாறையில் கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


வால்பாறையில் கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:00 PM GMT (Updated: 16 Nov 2018 9:42 PM GMT)

வால்பாறையில் கனமழை பெய்ததால் ஆறகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்தது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தால் வால்பாறை நகர் பகுதியிலும் ஒரு சில எஸ்டேட் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியதால் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும், கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் விடுமுறை விடப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் வால்பாறை பகுதி முழுவதும் கடுமையான குளிரும், பனிமூட்டமும் நிலவி வருகிறது. அக்காமலை, கருமலை எஸ்டேட் பகுதிகளில் விடிய, விடிய பலத்த காற்றடன் கனமழை பெய்ததால் நடுமலை ஆற்றிலும், வாழைத்தோட்டம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வாழைத்தோட்டம் ஆற்று பகுதியில் உள்ள வீடுகளை தொட்டுக் கொண்டு ஆற்றுத்தண்ணீர் சென்றுவருகிறது. நடுமலை ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையின் போதே வாழைத்தோட்டம் ஆற்று பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதே பொதுமக்கள் வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வாருவதற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் இப்போது பெய்த மழைக்கே ஆற்றுத்தண்ணீர் வீடுகளுக்கு அருகில்வந்து விட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

மலைப்பகுதியாக உள்ளதால் வால்பாறையில் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கு மழை தீவிரம் அடையும்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கையானது. ஆனால் வாழைத்தோட்டம் ஆற்றோர பகுதிகளில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால், அந்த ஆற்றின் கரையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டி, ஆற்றை தூர்வாரி ஆழப்படுத்தும்போதுதான் வெள்ளம்வரும்போது குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இதற்கு தடுப்புச்சுவர்கட்டி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை வந்து விட்டது. இந்த மழை தீவிரம் அடைந்தால் கடந்த காலத்தை போன்று பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். ஆற்றோரங்களில் குடியிருக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல நேரிடும். ஆகவே புயல் வரும்போதும், மழை வரும்போதும், வெள்ளம் வரும்போதும் தடுப்பு நடவடிக்கை என்பதை விட, முன்கூட்டியே செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். ஆகவே இனியும் அதிகாரிகள் காலம் கடத்தாமல் வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வாரி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story