புதுக்கோட்டையை பந்தாடிய ‘கஜா’ புயல் மரங்கள் சாய்ந்தன; மின்கம்பங்கள் சேதம்


புதுக்கோட்டையை பந்தாடிய ‘கஜா’ புயல் மரங்கள் சாய்ந்தன; மின்கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 17 Nov 2018 3:57 AM IST (Updated: 17 Nov 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையை ‘கஜா’ புயல் பந்தாடியது. மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்தன.

புதுக்கோட்டை,

‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடக்க தொடங்கியதும் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. புதுக்கோட்டையில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பலத்த சூறைக்காற்று வீசத்தொடங்கியது. தொடர்ந்து மழையும் பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரம் சரிந்து விழுந்ததில், அலுவலகத்தின் கட்டிடத்தில் ஒரு பகுதி சேதமடைந்தது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் பல இடங்களில் தெருக்கள் மற்றும் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. ராஜகோபாலபுரம், பெரியார்நகர், பூங்காநகர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், பொதுமக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்களும் அதிகளவில் இயக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு மேல் தான் சகஜ நிலை திரும்பியது.

வீடுகள் முன்பு தெருக்களில் விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்ற தொடங்கினர். சாலைகளில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்தோடியது. மாவட்ட விளையாட்டரங்கம், தற்காலிக பஸ் நிலையம், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி கிடந்தது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின்சார வினியோகம் இல்லை. மரங்கள் சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் நெடுஞ்சாலைகளில் விழுந்த மரங்களால் கிராமப்புறங்களுக்கு பஸ் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

‘கஜா’ புயல் தாக்கிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தீயணைப்பு வீரர்களும், மீட்பு பணி குழுவினர் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்த இடத்திற்கு சென்று அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பின், நேற்று மதியத்திற்கு மேல் போக்குவரத்து ஓரளவு சீரானது.

‘கஜா’ புயல் கரையை கடக்கும் போது புதுக்கோட்டையில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு சென்றதால், புதுக்கோட்டை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு நாட்களுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் நேற்று அதிகாலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால் கடைகள் பெரும்பாலும் திறக்கப்படவில்லை. காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறினர். திறந்திருந்த ஒரு சில கடைகளில் ஒரு லிட்டர் பால் ரூ.65 வரைக்கும் வியாபாரிகள் விற்பனை செய்தனர். பொதுமக்களும் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து வாங்கி சென்றனர். பல இடங்களில் பெட்ரோல் பங்குகளும் திறக்கப்படாததால், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் மின் கம்பங்கள் பல சேதமடைந்ததால் புதுக்கோட்டை நகரம் மற்றும் கிராமப்புறங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. வீடுகளில் மின்மோட்டார் உள்பட அத்தியாவசிய தேவைக்கு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் செல்போன் சேவையும் நேற்று பகலில் முடங்கியது. இணையதளத்தின் வேகமும் குறைந்தது.

Next Story