தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் - சரத்குமார் பேச்சு


தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் - சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:45 PM GMT (Updated: 16 Nov 2018 10:35 PM GMT)

திருவாடானையில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சரத்குமார் பேசினார்.

தொண்டி,

திருவாடானையில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் டிஜிட்டல் பிரபு தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் குருஸ் திவாகர், விவசாய அணி செயலாளர் நேசம் ஜோசப், கொள்கைபரப்பு செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:– தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எந்த தேர்தலாக இருந்தாலும் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும். வந்தாரை வாழ வைப்போம், ஆள வைக்க வேண்டாம். கருத்து சொல்வதற்கு உண்மை வேண்டும். அது என்னிடம் மட்டுமே உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்றால் அவரிடம் தான் கேட்க வேண்டும். இன்றைய தலைவர்களில் நான் தான் சிறந்தவனாக இருப்பேன். ரஜினியிடம் விளக்கமாக கேட்டிருந்தால் சொல்லியிருப்பார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் கூறுகிறார். 7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக்கூடாது. செல்போன் மூலம் பேசாமல் தைரியமிருந்தால் நேரில் பேசுங்கள். கருத்து யார் வேண்டுமானாலும் பேசலாம். அதற்காக போலீஸ் சட்டையை கழட்டி விடுவேன் என்று பேசுவது, பின் மன்னிப்பு கேட்பது ஜனநாயகம் அல்ல. நான் கடுமையாக உழைப்பவன். ஒரு காலத்தில் அ.தி.மு.க.விற்கு கொள்கை பரப்பு செயலாராக கூட உழைத்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2017–18ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110விதியின் கீழ் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி திருவாடானை தாலுகாவில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா மற்றும் அதனை சார்ந்த திட்டங்களை உடனே அரசு செயல்படுத்த வேண்டும். நீண்டகாலமாக ஊராட்சியாக திகழ்ந்து வரும் திருவாடானையை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். அஞ்சுகோட்டை, ஆதியூர் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள தொண்டி துறைமுகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

மீனவர்களுக்கு தடை கால நிவாரண நிதியை ரூ.12,000–மாக உயர்த்தி வழங்க வேண்டும். தொண்டியில் மீன் மார்க்கெட்டை விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி செயலாளர் மூர்த்தி ராஜா, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.


Next Story