புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்


புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:36 PM GMT (Updated: 16 Nov 2018 10:36 PM GMT)

கஜா புயலின் கோர தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் புரட்டிப்போட்டது போன்று காட்சியளிக்கின்றன.

திருமயம்,

கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறாவளி காற்று வீசியது. மேலும் பல இடங்களில் பலத்த மழையும் பெய்தது. சூறாவளி காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட சேதத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் புரட்டிப்போட்டது போன்று காட்சியளிக்கின்றன.

இதில் திருமயம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை 6 மணி வரை நீடித்தது. அரசு வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் திருமயம் பகுதியில் இருந்த தேக்கு, பலா, மா, கொய்யா, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் மரங்கள் விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

பலத்த மழையால் திருமயம் வேங்ககண்மாய், தாமரைக்கண்மாய் ஆகிய கண்மாய்கள் நிரம்பின. இந்த கண்மாய்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. திருமயம் பகுதியில் உள்ள சீமானூர், மணவாளிக்கரை, மெய்யப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்ததால், விவசாயிகள் கவலையில் மூழ்கினர். முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவரங்குளம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்து கிடந்ததால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளில் ஓடுகள், கூரைகள் பறந்தன. திருவரங்குளம் சிவன் கோவிலில் மழைநீர் மூலஸ்தானம் வரை புகுந்தது. இதில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் தண்ணீரில் மூழ்கியது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து நின்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது.

திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் மழைநீர் புகுந்ததால் 300 மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு செத்தன.

திருவரங்குளம் கே.வி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், தனக்கு சொந்தமான 2 சினை மாடுகளை, வீட்டிற்கு அருகில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். தொழுவத்தின் மேற்கூரையில் வைக்கோல் போர் வைத்திருந்தார். காற்றின் காரணமாக தொழுவத்தின் கல்லுக்கால்(கல் தூண்) உடைந்து, வைக்கோல் போருடன் 2 சினை மாடுகள் மீது விழுந்ததில் அவை இறந்தன.

இதேபோல் திருவரங்குளத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பால் பண்ணையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அங்கு மாடுகளுக்காக இரும்பு தகரத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. காற்றின் காரணமாக மேற்கூரை உடைந்து விழுந்ததில், 5 மாடுகள் காயமடைந்தன. ஒரு கன்றுக்குட்டி இறந்தது. இதேபோல் கிட்டக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டகைகள் சாய்ந்து விழுந்ததில் ஏராளமான ஆடுகள் செத்தன.

ஆவுடையார்கோவில் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆவுடையார்கோவிலில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள 2 வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்து சுற்றுச்சுவர் மற்றும் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தது. மின்கம்பமும் உடைந்து விழுந்தது. மேலும் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

பூவலூர் கிராமத்தில் 5 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மேலும் வேப்பமரம் வேரோடு சாய்ந்து, அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு சேதமடைந்தது. அமரடக்கியிலும், துரையரசபுரத்திலும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை ஆவுடையார்கோவில் தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் அப்துல்ரஹ்மான் தலைமையில் சென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடலோர பகுதிகளான மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், பொன்னகரம், காரக்கோட்டை, திணையாகுடி உள்ளிட்ட 32 கிராம பகுதிகளிலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

கறம்பக்குடி பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை சூறாவளிக்காற்று வீசியது. இதில் ஏராளமான ஓட்டு வீடுகள், குடிசைகள் சேதமடைந்தன. கோவில் வளைவு உள்பட கட்டிடங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து முடங்கியது. பூஞ்சோலையாக காட்சியளித்த கறம்பக்குடி காந்தி பூங்கா உருக்குலைந்தது. மின்சாரமும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் கறம்பக்குடி சந்திக்காத இயற்கை சீற்றத்தை தற்போது சந்தித்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

அரிமளம் ஒன்றியத்தில் சூறாவளி காற்றால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள், குடிசைகள் சேதமடைந்தன. ஒன்றியத்தில் 200 கால்நடைகள் இறந்தன. புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. இதனால் அரிமளம், கே.புதுப்பட்டி செல்லும் பஸ்கள் போக்குவரத்து தடைபட்டது. மாலை 5 மணிக்கு மேல் பொக்லைன் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளாற்றில் தண்ணீர் ஓடியது.

ஹோல்ஸ்வொர்த் அணைக்கட்டில் மதகுகளின் அடியில் தண்ணீர் கசிந்து சென்றது. சில மதகுகள் வழியாக தண்ணீர் சென்று வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க மதகுகள் அடியில் மணல் மூட்டைகளை வைத்து தண்ணீர் தேக்கப்பட்டது. ஹோல்ஸ்வொர்த் அணைக்கட்டு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அங்குள்ள விருந்தினர் மாளிகையின் மீது மரம் சாய்ந்ததால் முற்றிலுமாக சேதமடைந்தது. பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

அறந்தாங்கி பகுதியில் வீசிய சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை மற்றும் காற்றின் காரணமாக கொட்டகை விழுந்தது உள்ளிட்டவை காரணமாக 3 மாடுகள், 27 ஆட்டுக்குட்டிகள் செத்தன. 51 வீடுகள் சேதமடைந்தன. 30 வீடுகள் முழுமையாக இடிந்தன. மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Next Story