சிவகங்கை மாவட்டத்தில் சுவர் இடிந்து அரசு ஊழியர் பலி; மரம் சாய்ந்து பெண் நசுங்கி சாவு


சிவகங்கை மாவட்டத்தில் சுவர் இடிந்து அரசு ஊழியர் பலி; மரம் சாய்ந்து பெண் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 16 Nov 2018 11:00 PM GMT (Updated: 16 Nov 2018 10:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் புயல், மழைக்கு அரசு ஊழியர், ஒரு பெண் என 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சிவகங்கை,

கஜா புயல் எதிரெலியாக சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தும் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் மழைக்கு அரசு ஊழியர் ஒருவரும், துப்புரவு வேலை செய்த பெண்ணும் பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:–

சிவகங்கை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 58). இவர் நெடுஞ்சாலைத்துறையில் மானாமதுரை சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் மழையின் போது அவரது பக்கத்து வீட்டின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து முத்துமுருகன் மீது விழுந்தது. அதில் பலத்த காயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமுருகன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தின் போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கருப்பர் கோவில் காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. அவருடைய மனைவி எலிசபெத் ராணி (35). இவர் நெற்குப்பை பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு டயானா(15) மற்றும் ஷாலினி(10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலை வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் அருகே நின்ற பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட எலிசபெத் ராணி உயிருக்கு போராடினார். சற்று நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மரத்தை அகற்றி எலிசபெத் ராணியின் உடலை மீட்டனர். தாயை பிணமாக பார்த்த அவருடைய மகள்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் எலிசபெத் ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து நெற்குப்பை போலீசார் வழககு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி தெரியவந்ததும், கேஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., எலிசபெத்ராணியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி செய்தார்.


Next Story