அடுத்த மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அடுத்த மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:24 PM GMT (Updated: 16 Nov 2018 11:24 PM GMT)

அடுத்த மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நேற்று கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை முன்னிலை வகித்தார்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது:- தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 2012- 2013-ம் கல்வியாண்டில் 12-ம் இடத்திலிருந்த தமிழக பள்ளி கல்வித்துறையானது அதன் பின்னர் அடுத்தடுத்து முன்னேற்றமடைந்து தற்போது 7-ம் இடத்தை பிடித்து இருக்கிறது. கரூர் மாவட்டத்தில் 13,384 எண்ணிக்கையிலான விலையில்லா சைக்கிள்கள், 25,670 எண்ணிக்கையிலான விலையில்லா புத்தகப்பைகள், 18,864 எண்ணிக்கையிலான விலையில்லா மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. அவை டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.1 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நான்கு பள்ளிகளுக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 79 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் இரண்டு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளன. மேலும் முதல்- அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளுக்காக ரூ.8 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 465 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் கணினி வசதி மற்றும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கு வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 26,000 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமாக பதிவுசெய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், பள்ளிக்கல்வித்துறை நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் வாசு, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, முதன்மைக்கல்வி அதிகாரி தங்கவேல், மாவட்ட கல்வி அதிகாரிகள் கபீர் (குளித்தலை), கனகராஜ் (கரூர்) மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலகண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், குளித்தலை ஒன்றிய செயலாளர் டி.வி.விநாயகம், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் நவம்பர் 16-ந்தேதி (நேற்று) முதல் 18-ந்தேதி வரை ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 12 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற 2,222 மாணவர்களும், 2,198 மாணவிகளும் என மொத்தம் 4,420 மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

Next Story