அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் புதுச்சேரியில் பெரிய அளவில் சேதம் இல்லை - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் புதுச்சேரியில் பெரிய அளவில் சேதம் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
‘கஜா’ புயல் நேற்று அதிகாலை கரையை கடைந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மழை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தினை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘கஜா’ புயலினை எதிர்கொள்ள புதுவை அரசு தயார் நிலையில் இருந்தது. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் சேதம் குறைந்தது. உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டன. புதுவையை பொறுத்தவரை மரங்கள் விழுந்ததாக 11 புகார்கள் பெறப்பட்டன. புகார்கள் பெறப்பட்டவுடன் ஊழியர்கள் விரைந்து சென்று அதை அகற்றினார்கள். சில இடங்களில் சாலைகள் சேதமடைந்ததாக கூறியுள்ளனர். அதையும் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை.
காரைக்கால் மாவட்டத்தில்தான் சேதம் அதிகமாக உள்ளது. அங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இரவு பகலாக ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் கமலக்கண்ணன் அங்கேயே இருந்து பணிகளை செய்து வருகிறார். தற்போது முதல்–அமைச்சரும் அங்கு சென்று பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கிராமப்புற சாலைகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, காவல், தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு விரைவில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அதை சரிசெய்ய புதுவையிலிருந்து 30 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்ட நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்களை இயக்கி தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
முன்னதாக நேற்று காலை அமைச்சர் நமச்சிவாயம் வில்லியனூர் தொகுதி முழுவதும் சென்று காற்று மற்றும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். அப்போது எஸ்.எஸ்.நகர், உத்திரவாகினிபேட் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரப்பட்ட மண் அப்பகுதியிலேயே குவிக்கப்பட்டு இருந்தது. அதைக்கண்ட அமைச்சர் நமச்சிவாயம் அதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அப்போது அமைச்சர் நமச்சிவாயத்துடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர்கள், மாநிலம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் சென்றனர்.