வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா வினியோகம் செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம்


வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா வினியோகம் செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 2:55 PM GMT)

வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் வினியோகம் செய்த தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது. இங்கு 700–க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயிலில் காவலர்கள் சோதனை செய்தபோது திருவண்ணாமலையை சேர்ந்த தண்டனை கைதி ஒருவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரங்களில் 5–க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெயில் உயர் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில் கைதிகளுக்கு ஜெயிலில் பணிபுரியும் முதன்மை தலைமை காவலர் செல்வின்தேவதாஸ் என்பவர் அந்த கைதிக்கு கஞ்சா வினியோகம் செய்தது தெரியவந்தது. மேலும் அதற்கான ரூ.5 ஆயிரம் வாங்கியதாக அந்த கைதி ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து செல்வின்தேவதாஸை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:–

கைதிகளுக்கு செல்போன், கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை முதன்மை தலைமை காவலர் செல்வின்தேவதாஸ் வினியோகம் செய்ததாக புகார்கள் வந்தது. இதையடுத்து நாங்கள் விசாரணை மேற்கொண்டோம்.

அவரது 3 மாத வங்கிக்கணக்குகளை ஆராய்ந்தபோது பலர் பணம் போட்டுள்ளது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் கைதிகளுக்கு செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை வினியோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் சென்னை புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேல்விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story