தீபத்திருவிழாவின் போது தரமற்ற உணவுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
தீபத்திருவிழாவின் போது வழங்கப்படும் உணவுத்தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி கூறி உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று திருவண்ணாமலை நகரத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபத் திருவிழாவில் வணிகர்கள் தங்களால் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. தேநீர் கடைகளில் தரமான டீத்தூள் மற்றும் காபித் தூளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. தரமற்ற செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பொருட்கள், பலகாரங்களை நேரடியாக செய்தித்தாளில் மடித்து தருவது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால் அதனை தவிர்க்கப்பட்டு வாழை இலை, பாக்கு மட்டை, மந்தார இலைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடைகளில் பல்லி, பூச்சிகள் மற்றும் எலி, பூனை, நாய் போன்றவை உள்ளே வராதபடி பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட, சுத்தமான குடிநீரை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சமைத்த பொருட்களை சூடான நிலையிலேயே பரிமாற வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைத்த பழைய உணவு பொருட்களை பயன்படுத்த வேண்டாம். உணவகங்களின் தூய்மை, உணவுப் பொருட்களின் பாதுகாப்பு தன்மைகளை உறுதி செய்து பக்தர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு அளிக்கப்படும் அன்னதான உணவை தேவையான அளவே வாங்குங்கள். பசி தீரும் அளவிற்கு உண்ணுங்கள். எஞ்சிய உணவை நடைபாதையில் வீசி எறியாதீர்கள். பொதுமக்கள் எந்த உணவு பொருட்களையும் வீணாக்காமல், தேவையற்ற உணவு பொருட்களை நகராட்சி வைத்திருக்கும் குப்பை தொட்டியில் கொட்டவும், நடைபாதை தூய்மையாய் இருக்க உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிக வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உடனடி குளிர்பானங்கள் மற்றும் காலிபிளவர் பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்ற சாலையோர கடைகளில் விற்பனை செய்யும் உணவுப்பொருட்களை தவிர்த்திடுங்கள். பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை வாங்குவதை தவிர்த்திடுங்கள். உணவுத்தரம் குறித்தும், தரமற்ற உணவுகள் குறித்தும் ‘வாட்ஸ்அப்’ எண்ணில் 94440 42322 பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story