ஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
ஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஓசூர்,
ஒசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில் காதல் திருமணம் செய்த நந்தீஷ், சுவாதி ஆகிய 2 பேரும் பெண் வீட்டாரால் கடத்தி ஆணவ கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று சூடுகொண்டப்பள்ளி வந்து நந்தீசின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, உடுமலைப்பேட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா ஆகியோரும் வந்து நந்தீஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காதல் திருமணம் செய்த நந்தீஸ்- சுவாதி தம்பதியை பெண்ணின் பெற்றோர் கடத்தி சென்று மிக கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அவர்களை காணவில்லை என்று காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்ட பின்னரும் கூட போலீசார் தாமதமாக விசாரித்து நேற்று தான் (நேற்று முன்தினம்) அவர்கள் உடலை கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற ஆணவ கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் யார்,யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
இந்த ஆணவ கொலைக்கு பின்னால் மிகப்பெரிய சாதிவெறி சதி இருப்பதாக நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட கொடூர கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை தந்தால்கூட அதில் தவறில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நந்தீஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் கொண்டவர்களும் சாதிவெறி போக்குகளை, சாதிவெறி சக்திகளை ஒழிப்பதற்கு, ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆணவ கொலை செய்யப்பட்ட நந்தீசின் குடும்பம், அ.தி.மு.க.வை சேர்ந்த குடும்பமாகத்தான் தெரிகிறது. அவர்கள் வீட்டில் அந்த கட்சியின்் போஸ்டர்கள் உள்ளன. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசு இதையும் ஒரு சாதாரண கொலையாக நினைத்து கடந்து போக வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் இங்கு இருக்கிறது.
இதுபோன்ற சாதி ரீதியான வன்மங்கள், கொடூரங்கள் நடைபெற தமிழகம் சரியான களமாக இருந்து விடுமோ என்ற அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு மோசமான இடத்திற்கு போய் சேர்ந்து விடும். ஏனெனில் இன்று இளைஞர்கள் இந்த ஆணவ கொலைகள் குறித்து பெரிய அளவில் பேச ஆரம்பித்துவிட்டனர். பெரிய விவாதங்களும் உருவாகி வருகிறது. இந்த படுகொலைக்கு தீர்வு காணாமல் நாங்கள் விடமாட்டோம். நிச்சயமாக நியாயத்தை நோக்கி நகர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். நந்தீஸ் - சுவாதி தம்பதி ஓசூரில் கடத்தப்பட்டிருந்த போதிலும், கர்நாடகாவில் கொலை செய்யப்பட்டு உடல் அங்கு வீசப்பட்ட காரணத்தால் கர்நாடக மாநிலம் பெலகவாடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மாற்ற வலியுறுத்தி வருவதாக ரஞ்சித் தெரிவித்தார்.
Related Tags :
Next Story