கிருஷ்ணகிரியில் 2,780 மாணவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 2,780 மாணவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, கிருஷ்ணகிரி அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கனகமுட்லு அரசு பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சி பள்ளி, புனித அன்னாள் பள்ளி ஆகிய 5 பள்ளிகளை சேர்ந்த 2,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 895 மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த மாவட்டத்தில் 106 பள்ளிகளை சேர்ந்த 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு 27 ஆயிரத்து 653 மாணவர்களுக்கு ரூ.10 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 433 மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் உடற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும்.
எனவே மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று சிறந்த அலுவலர்களாகவும், பொறியாளர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் என உருவாகி நமது மாவட்டத்திற்கு பெருமை தேடி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மாதையன், ஹரீஷ்ரெட்டி, கல்வி ஆய்வாளர் ஜெயராமன், இடைநிலை கல்வி ஒருங்கிணைப்பாளர் சூசைநாதன், தலைமை ஆசிரியர்கள் மகேந்திரன், சேரலாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story