அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அரசு செயலாளர் வெங்கடேசன் தகவல்
அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு செயலாளர் வெங்கடேசன் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலரும், மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலருமான ஆர். வெங்கடேசன் தலைமையில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.
இதில் அரசு துறைகளில் உள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில் அரசு செயலாளர் ஆர். வெங்கடேசன் பேசியதாவது:-
தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கி செயல்படுத்தி வருகிறது. துறைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை வளர்ச்சி பணிகளுக்கு சிறப்பாக பயன்படுத்த வேண்டும். மேலும் துறைகளுக்கு வழங்கப்பட்ட திட்ட பணிகளை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் தொற்று உள்ள இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தூய்மை பணிகள் ஊராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகள், மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை செய்ய வேண்டும். பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடையே தொற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அப்பணிகளை கண்காணிக்க வேண்டும்.
வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் மற்றும் மானியங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அரசு வழங்கியுள்ள இலக்கினை விரைந்து முடிக்க வேண்டும்். அதேபோல காய்கறி உற்பத்தி, மலர் சாகுபடி விவசாயிகளுக்கு இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு இயற்கை உரம் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி நல்ல விளைச்சல் கிடைக்க வேளாண் துறை அலுவலர்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதேபோல கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வழங்க கூடிய விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மேற்கொள்ள கூடிய திட்ட பணிகளை கொடுக்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் முடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கும் பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும்.
எனவே அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து விரைவில் முடித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வேளாண்மைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு பவர் டில்லர், மண்வள அட்டையும், பூச்சி மருந்து பாதுகாப்பு உபகரணங்களை அரசு செயலாளர் வெங்கடேசன் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story