சங்ககிரி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
சங்ககிரி அருகே குளிக்க சென்ற போது கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சங்ககிரி,
சங்ககிரி அருகே ஐவேலிகிராமம் அக்கமாபேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 19). இவர் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருடைய நண்பர் வீராசாமி (23). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை ஆர்.கே.நகர் பகுதி உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது வீராசாமி குளித்து விட்டு கிணற்றுக்கு மேலே வந்து விட்டார். ஆனால் சீனிவாசன் தண்ணீரில் மூழ்கினார். இதை அறியாமல் வெளியே வந்த வீராசாமி, அவரை காணாததால் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விசாகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த சீனிவாசன் உடலை மீட்டனர். மேலும் சீனிவாசனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த சங்ககிரி போலீசார் இறந்த சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க சென்ற இடத்தில் கிணற்றில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story