கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க பூமி பூஜை


கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 18 Nov 2018 4:15 AM IST (Updated: 17 Nov 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில்் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 6 அணுஉலைகள் அமைக்க கடந்த 1991-ம் ஆண்டு இந்தியா-ரஷியா இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி 2001-ம் ஆண்டு ரூ.13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 2 அணு உலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதல் அணுஉலை கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு முதல் முதல் அணுஉலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டது.

இதுவரை முதல் அணுஉலையின் மூலம் 21 ஆயிரத்து 130 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2-வது முறையாக எரிபொருட்கள் நிரப்பப்பட்டு நேற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

2-வது அணுஉலை கட்டுமானப்பணி கடந்த செப்டம்பர் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி ‘கிரிட்டிகாலிட்டி‘ என்ற தொடர் அணுபிளவு சோதனை தொடங்கப்பட்டு, மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வணிகரீதியிலான மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது வரை 2-வது அணு உலையின் மூலம் 7 ஆயிரத்து 676 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக காங்கிரீட் அமைக்கும் பணியை 2016-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி ரஷியாவில் பிரதமர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தனர்.

3-வது அணுஉலை வருகிற 2023-ம் ஆண்டும், 4-வது அணுஉலை 2024-ம் ஆண்டு செயல்பட தொடங்கும் வகையில் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அதாவது, 5 மற்றும் 6-வது அணுஉலைகள் அமைக்க கடந்த ஆண்டு மே 1-ந்தேதி ரஷியா-இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி அந்த அணு உலைகள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்திய அணுசக்தி துறை தலைவர் கே.என்.வியாஸ், இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.சர்மா, ரஷிய நாட்டை சேர்ந்த அணுஉலை உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் லிகாஷேவ்அலெக்சி, லிம்ரான் கோசேவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் இரு நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான பணிகளையும், 1 மற்றும் 2-வது அணு உலையின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தனர்.

Next Story