தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:30 AM IST (Updated: 17 Nov 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது ராஜாஜி பூங்காவில் இருந்து புறப்பட்டு, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. இதில், அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது;-

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. குழந்தை திருமணம், குழந்தைகள் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளை பாதுகாத்தல், மாற்றுத்திறனாளி குழந்தைகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு இடர்பாடுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காகவும், பராமரிப்பதற்காகவும் சைல்டு லைன் 1098 இலவச சேவை செயல்படுத்தபட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்திட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், தூத்துக்குடி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story