‘கஜா’ புயலில் வாழைகள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை திருச்சியில் சோகம்


‘கஜா’ புயலில் வாழைகள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை திருச்சியில் சோகம்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:45 AM IST (Updated: 18 Nov 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ‘கஜா‘ புயலால் வாழைகள் சேதமடைந்த வேதனையில், விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. சூறைக்காற்றுடன் மழையும் பெய்ததால் திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன. மேலும் வாழைகளும் சேதமடைந்தன. இந்த நிலையில் திருச்சியில் வாழைகள் சேதமடைந்ததில் மனம் உடைந்த விவசாயி ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன்விவரம் வருமாறு:-

திருச்சி திருவானைக்காவல், மேலகொண்டையம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் செல்வராஜ் (வயது 29). விவசாயியான இவர் அந்த பகுதியில் 1½ ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டிருந்தார். மேலும் இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் டெலிவரி செய்யும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ‘கஜா‘ புயல் தாக்குதலில் அவரது தோட்டத்தில் இருந்த வாழைகள் அனைத்தும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. தோட்டத்திற்கு சென்ற செல்வராஜ், வாழைகள் சரிந்து கிடந்ததை பார்த்து மனவேதனை அடைந்தார். அவர் கடன் வாங்கி வாழையை பயிரிட்டிருந்தார். வாழைகள் முழுவதும் சேதமடைந்ததால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாது என எண்ணி அவர் புலம்பியுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர்களிடமும் வாழைகள் சேதமடைந்தது குறித்து புலம்பினார். சேதமடைந்த வாழைகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வந்திருந்தார். அதனை அவ்வப்போது பார்த்து கவலை அடைந்தார்.

வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற செல்வராஜ் தனது நண்பர்களுக்கு மீண்டும் போன் செய்து புலம்பினார். இந்த நிலையில் மாம்பழச்சாலை அருகே காவிரி பாலம் பக்கம் ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அவரை தேடி நண்பர்கள் சென்ற போது தண்டவாளத்தில் செல்வராஜ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தகவல் அறிந்ததும் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் நேற்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாழைகள் சேதமடைந்ததில் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த செல்வராஜ்க்கு சரண்யா என்ற மனைவியும், 2½ வயதில் மகளும் உள்ளனர். செல்வராஜ் தற்கொலை தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story