கோவில்பட்டியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் அனைத்து தொழிற்சங்கங்கள் தீர்மானம்
கோவில்பட்டியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி ஐ.என்.டி.யு.சி. மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.
5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், ஏ.ஐ.சி.சி.டி.யு. பொன்ராஜ், எப்.ஐ.டி.யு. சங்கரன், எம்.எல்.எப். குழந்தைவேல், எல்.பி.எப். பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கோவில்பட்டி நகரில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது. உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரியை குறைக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 5-ந் தேதி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. மேலும் வருகிற 12-ந் தேதி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story