சேரன்மாதேவி அருகே நிதிநிறுவன ஊழியரிடம் ரூ.2.30 லட்சம் பறிப்பு கணவன்-மனைவி கைது
சேரன்மாதேவி அருகே நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2.30 லட்சத்தை பறித்துச்சென்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிராஜ் (வயது 43). இவர் நெல்லையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனத்தை நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரை சேர்ந்த சிவசங்கரலிங்கம், கடந்த அக்டோபர் மாதம் அணுகி, தன்னுடைய நகையை சேரன்மாதேவியில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருப்பதாக கூறி, அதை திருப்பி விற்க நிதிஉதவி வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து சீனிராஜ் ரூ.2.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு சேரன்மாதேவிக்கு சென்றார். அங்கு நின்றிருந்த சிவசங்கரலிங்கத்தை சந்தித்து அடகு ரசீதை கேட்டார். அப்போது ரசீது தனது மனைவி ராமலட்சுமி கொண்டு வருவதாக கூறிஉள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
இதையடுத்து சீனிராஜ் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டார். அவரை சிவசங்கரலிங்கம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று பத்தமடையில் வழிமறித்து பேசினார். அப்போது அவருடைய மனைவி ராமலட்சுமியையும் அழைத்து வந்துள்ளார்.
பின்னர் திடீரென்று சிவசங்கரலிங்கமும், ராமலட்சுமியும் சேர்ந்து சீனிராஜிடம் இருந்த ரூ.2.30 லட்சத்தை பையுடன் சேர்த்து பறித்துக் கொண்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். அதன்பிறகுதான் அடகு நகையை மீட்க உதவி கேட்டு, நூதன முறையில் பணத்தை பறித்துச்சென்றது சீனிராஜிக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக சீனிராஜ் பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து, சிவசங்கரலிங்கம், ராமலட்சுமி ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story