மாவட்ட செய்திகள்

சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் கழிவால் மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்த வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி + "||" + The road is concentrated on the road Soil waste Motorcycle slide The fallen young man, The bus crashed into the wheel

சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் கழிவால் மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்த வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் கழிவால் மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்த வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
சாலையில் குவிக்கப்பட்ட மண் கழிவால் மோட்டார் சைக்கிள் சறுக்கி கீழே விழுந்த வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், புளியந்தோப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு, ஸ்டீபன்சன் சாலையில் உள்ள நார்த்டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி அஞ்சலியுடன் வசித்து வந்தவர் அம்புஜ் கத்துட்யா (வயது 27). கொல்கத்தாவை சேர்ந்த இவர் 6 மாதங்களுக்கு முன்னர்தான் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அம்புஜ் கத்துட்யா, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.


இந்த நிலையில் அவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு ஸ்டீபன்சன் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மாநகர பஸ்சை முந்திச்செல்ல முயற்சித்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள், சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் கழிவில் சறுக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில், அவர் மீது மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் அதே இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அம்புஜ் கத்துட்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அம்புஜ் கத்துட்யா பலியான தகவல் அறிந்ததும், அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஆத்திரம் அடைந்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் குக்ஸ் சாலை-ஸ்டீபன்சன் சாலை சந்திப்புக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, 3 உதவி கமிஷனர்கள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- சென்னை புளியந்தோப்பில் உள்ள தனியார் வளாகத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தனியார் கட்டுமான வளாகத்துக்கு செல்ல ஓட்டேரி குக்ஸ் சாலை, ஸ்டீபன்சன் சாலை மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை என 3 முக்கிய பிரதான சாலைகளில் 4 வாயில்கள் உள்ளன.

இங்கு கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், அந்த வாகனங்களின் சக்கரங்களில் ஒட்டி இருக்கும் மண்கழிவுகள் சாலையில் திட்டு திட்டாக படிந்து விடுவதால் அந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் அவருடன் கைகலப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களில் அஸ்வின்(37), தருண்(41) , ராஜேந்திரன்(48), மகேந்திரகுமார்(47), கிஷோர் (43) மற்றும் ஜித்தேஷ் (38) ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களை விடுதலை செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி ஆனந்தகுமார், முதல் கட்டமாக அந்த தனியார் கட்டுமான வளாகத்துக்கு செல்லும் ஸ்டீபன்சன் சாலையில் உள்ள முக்கிய 2 வாயில்களுக்கு ‘சீல்’ வைத்தார். இனி மண் கழிவுகள் சாலைக்கு வராது என்பதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்தினர் உத்தரவாதம் கொடுக்கும்வரை ‘சீல்’ அகற்றப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பஸ் டிரைவர் கருப்பசாமி (42) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...