65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: 2,072 பேருக்கு ரூ.6¼ கோடி கடனுதவி கலெக்டர் ராமன் வழங்கினார்


65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: 2,072 பேருக்கு ரூ.6¼ கோடி கடனுதவி கலெக்டர் ராமன் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Nov 2018 11:15 PM GMT (Updated: 17 Nov 2018 7:20 PM GMT)

வேலூரில் நடைபெற்ற 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 2,072 பேருக்கு ரூ.6 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்துக்கு கடனுதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

வேலூர்,

மாவட்ட கூட்டுறவுத்துறையின் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வேலூரில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. அத்தகைய கிராமத்தின் வளர்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நல்ல பல கடன் திட்டங்களை வழங்கி கிராமங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறது. சிறு, குறு விவசாயிகளின் சிரமங்களை போக்கிடும் வகையில் கூட்டுறவு கடன் சங்கங்கள் உடனுக்குடன் கடனுதவிகளை வழங்கி வருகிறது.

தற்போது வேலூர் மாவட்டத்தில் ஒரே விதமாக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை இணைத்து கூட்டுப்பண்ணையம் என்ற திட்டத்தின் மூலமாக நவீன வேளாண் கருவிகளை மானியத்துடன் வழங்கி விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக கடனுதவி பெற்று சுயதொழில் செய்து பல்வேறு உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் 2017-2018-ம் ஆண்டில் சிறுவணிக கடனாக 3,834 நபர்களுக்கு ரூ.5 கோடியே 83 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரையில் 2,443 நபர்களுக்கு ரூ.5 கோடியே 30 லட்சம் சிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 2 ஆயிரத்து 72 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 98 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நினைவு பரிசுகளையும், கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களையும் கலெக்டர் ராமன் வழங்கினார். விழாவின்போது பள்ளி மாணவர்கள் யோகாசனங்களை செய்து காட்டினர்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் எ.ஆர்.ராஜேந்திரன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் பொ.ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான், ஆவின் பொது மேலாளர் கே.வி.கோதண்டராமன், ஆவின் முன்னாள் தலைவர் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஏ.ஜி.விஐயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் எம்.சரவணன், மாவட்ட கூட்டுறவு அச்சக முன்னாள் தலைவர் டபிள்யு.ஜி.மோகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் வேலூர் சரக துணைப்பதிவாளர் க.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story