நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு சேலத்தில் பரிதாப சம்பவம்


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு சேலத்தில் பரிதாப சம்பவம்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:00 AM IST (Updated: 18 Nov 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

சேலம், 

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மேச்சரியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம், கொத்தனார். இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். இதில் 2-வது மகன் சங்கீத்(வயது12). இவன் நரசோதிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அன்புசெல்வன்(14). இவன் குரங்குசாவடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

சங்கீத்தும், அன்புசெல்வனும் நண்பர்கள் ஆவர். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் இவர்கள் தனது சக நண்பர்கள் சிலருடன் சிவாயநகர் அருகே உள்ள ரெட்டியூர் ஏரிக்கு குளிக்க சென்றனர். அங்கு அனைவரும் ஏரிக்குள் இறங்கி குளித்தனர். இதில் சங்கீத், அன்புசெல்வன் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சேற்றில் சிக்கி மாணவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் சத்தம் போட்டு அலறினர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் சிலர் ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர்கள் சங்கீத், அன்புசெல்வன் ஆகியோரது உடல்களை வெளியே மீட்டு வந்தனர். இந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து மாணவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story