‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தாமதம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது


‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தாமதம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 4:45 AM IST (Updated: 18 Nov 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ‘கஜா‘ புயல் சீரமைப்பு பணி தாமதமாக நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க. பெண் நிர்வாகி மகனுடன் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை,

‘கஜா‘ புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பலத்த சேதமடைந்து நாசமாகி உள்ளது. சாய்ந்த மரங்கள், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காமராஜபுரத்தில் சீரமைப்பு பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

இந்நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கமலாவும், அவரது மகன் சரவணனும் சீரமைப்பு பணி தாமதமாக நடந்து வருவதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட காமராஜபுரம் பகுதி மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என கூறி அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து அந்த 2 பேரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கமலா, அவரது மகன் சரவணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் புகார் அளித்தார்.

அதன்பேரில் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கமலா, அவரது மகன் சரவணன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கமலா தி.மு.க. மகளிரணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story