கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 12:00 AM GMT (Updated: 17 Nov 2018 10:09 PM GMT)

கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசும் என்றும், பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் ஒருவார காலத்திற்கு முன்பு இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கஜா புயல் வேகத்தை காட்டிலும், அரசு வேகமாக செயல்பட்டது. இந்த புயலினால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 136 பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன.

பெரும்பாலும் நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு சரியான முறையில் நடந்தது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வேண்டுமென்றே சிலர் குற்றம் சாட்டி உள்ளனர்.

சிறப்பு ஆசிரியர் தேர்வில் கலந்து கொண்டவர்கள் என்னை நேரில் சந்தித்து எந்த இடத்தில் முறைகேடு நடந்தது என்று சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவ–மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்காக ஜெர்மன், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து 120 பயிற்றுனர்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வர உள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து நோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story