புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க 166 மருத்துவ குழுக்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்


புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க 166 மருத்துவ குழுக்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:25 PM GMT (Updated: 17 Nov 2018 10:25 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க 166 மருத்துவ குழுக்கள அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி–உடுமலை ரோட்டில் இருந்து கள்ளிப்பாளையம் வரை ரூ.53 லட்சத்து 10 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்க சின்னாம்பாளையத்தில் நேற்று பூமிபூஜை நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.அதை தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உடுமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், கோலார்பட்டி, எஸ்.மலையாண்டிபட்டிணம், நல்லாம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சின்னாம்பாளையம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது அந்த குழாய்கள் பழுதடைந்து விட்டதால், கழிவுநீர் கலந்து விடுகின்றது. இதன் காரணமாக புதிதாக குழாய் பதிக்க ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தார்சாலை பணிகளுடன், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்–அமைச்சர் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏற்கனவே அனைத்து மண்டல இணை இயக்குனர்கள் தலைமையில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க, 166 கால்நடை மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது.

தற்போது மழை நின்று விட்டதால், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க கால்நடைகளுக்கு தேவையான நோய் தடுப்பு மருந்துகள் இருப்பில் உள்ளன. அதேபோன்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ குழுவும், அம்மா ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளின் மதிப்பு குறித்து தயார் செய்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அனுப்ப உள்ளனர். அதன் அடிப்படையில் இறந்துபோன கால்நடைகளுக்கு உதவிகளை முதல்–அமைச்சர் அறிவிப்பார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 59 பசுக்கள், 9 காளைகள், 2 கிடாரி மாடுகள், 296 செம்மெறி ஆடு குட்டிகள், 144 வெள்ளாடுகள், 19 ஆடுகள், 1300 கோழிகள், 2 வான் கோழிகள் போன்ற கால்நடை இனங்கள் இறந்ததாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது. உடனடியாக எந்தந்த பகுதிகளில் எதனால் அவைகள் இறந்தன என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு குழுக்கள் சென்றுள்ளன. அதை போல முகாம்களில் உள்ள மாடுகளுக்கு தடுப்பூசிகள் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கால்நடைகளை பொறுத்தவரை ஒரு சில பகுதிகள் மட்டும் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் கூட, மிக பெரிய அளவில் இல்லாமல் அனைத்து கால்நடைகளையும் காப்பாற்றி உள்ளோம். நோய் ஏற்படுவதை தடுக்க வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் முன்னோட்டமாக மருந்துகளை கால்நடைகளுக்கு போடுவதற்கு இந்த குழுக்கள் அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story