புதிதாக உருவாகும் ஆனைமலை தனி தாலுகாவுக்கு அரசாணை வெளியீடு - சப்–கலெக்டர் தகவல்
புதிதாக உருவாகும் ஆனைமலையை தனி தாலுகாவாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
ஆனைமலை,
தமிழகத்திலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கியது பொள்ளாச்சி தாலுகாவாகும். இதில் நிர்வாக வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு பணிகளுக்காக கேரள எல்லையை ஒட்டிய ஆனைமலை, சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகின்றன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், நிர்வாக ரீதியாக பணிகளை எளிமைப்படுத்தவும் ஆனைமலையை புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2017–ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், ஆனைமலை தனி தாலுகாவாக மாற்றப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் அறிவித்தார். இதற்கு முறையான அரசாணை பிறப்பிக்க பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அவற்றை விரைந்து முடிக்கும்படி வருவாய்த்துறையினருக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து பொள்ளாச்சி வருவாய்த்துறையினர், கிராமங்களை இணைத்தல், உள்வட்டங்களை முடிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்தினர். இந்தநிலையில் ஆனைமலையை தனி தாலுகாவாக அறிவித்தது தொடர்பான முறையான அரசாணை நேற்று முன்தினம் மாலையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களை ஒப்பிடும் போது பொள்ளாச்சி மிகப்பெரிய தாலுகாவாகும். பொள்ளாச்சி தாலுகா 742.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 4 லட்சத்து 75 ஆயிரத்து 128 மக்கள் (2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்) வசித்து வருகின்றனர். இந்த தாலுகா 96 கிராமங்கள், 8 உள்வட்டங்கள், 3 வருவாய் மண்டலங்கள், ஒரு சிறப்பு நிலை நகராட்சி, 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 84 ஊராட்சிகளை கொண்டது.
பொள்ளாச்சி தாலுகா பகுதிகளை பிரித்து, ஆனைமலை தனி தாலுகாவாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி புதிதாக உருவாக உள்ள ஆனைமலை தாலுகா 368.13 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவு கொண்டது. 1 லட்சத்து 72 ஆயிரத்து 164 பேர் மக்கள் புதிய தாலுகாவில் சேர்க்கப்படுவார்கள். உடுமலை, வால்பாறை (தனி) சட்டசபை தொகுதிகள் பகுதிகள் தாலுகா பகுதிக்குள் வரும்.
வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, ஒடையகுளம், கோட்டூர், சமத்தூர் ஆகிய 5 பேரூராட்சி பகுதிகளும், தெற்கு ஒன்றியத்தில் உள்ள சில கிராமங்களும் சேர்க்கப்படும். புதிய தாலுகாவில் ஆனைமலை, மார்ச்சநாயக்கன்பாளையம், கோட்டூர் ஆகிய உள்வட்டங்கள் வரும்.
அதற்கு உட்பட்ட ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், ஆனைமலை, பெத்தநாயக்கனூர், தென்சித்தூர், சோமந்துரைசித்தூர், தென்சங்கம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், பெரியபோது, அம்பராம்பாளையம், சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், கோட்டூர், அங்கலகுறிச்சி, துறையூர், கரியாஞ்செட்டிபாளையம், பில் சின்னாம்பாளையம், சமத்தூர், எஸ்.பொன்னாபுரம், தொண்டாமுத்தூர், கம்பாலப்பட்டி, ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம், நல்லூர், வீரல்பட்டி, தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம் ஆகிய 31 ஊராட்சிகளும் சேர்க்கப்படும்.
ஆனைமலை தாலுகா அலுவலகம் அமைக்க இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது ஒரு சில இடங்கள் தேர்வு செய்து பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் எந்த இடத்தில் அலுவலகம் அமைக்கலாம் என்பதை வருவாய் துறை, பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.
ஆனைமலை தாலுகா அறிவிக்கப்பட்டு உள்ளதால், பொள்ளாச்சி தாலுகா 374.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். மேலும் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கோலார்பட்டி, பெரியநெகமம், ராமபட்டிணம் ஆகிய 5 உள்வட்டங்களும், அதற்கு உட்பட்ட 65 ஊராட்சிகளும், பெரிய நெகமம், ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் பொள்ளாச்சி சிறப்பு நிலை நகராட்சியுடன் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொள்ளாச்சி தாசில்தார் செல்வபாண்டி கூறியதாவது:–
ஆனைமலை தாலுகா அலுவலகம் அமைவதற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவு, சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் பிரிவு ஆகியவற்றிற்கு 17 பணியிடங்கள், நில அளவைப் பிரிவிற்கு 6 பணியிடங்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதில் புதிய பணியிடங்கள் மற்றும் மறுபரவலமர்த்தல் என மொத்தம் 109 பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும் ஓராண்டிற்கான தொடரும் செலவினமாக ரூ. ஒரு கோடியே 7 லட்சத்து 67 ஆயிரத்து 660ம், தொடராச் செலவினமாக ரூ. 6 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
அரசாணை வெளியிட்டது குறித்து ஆனைமலை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து நேற்று காலை ஆனைமலை முக்கோணம் பகுதியில் திரண்ட அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். வால்பாறை தொகுதி கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்களான சுந்தரம் (கிழக்கு), கார்த்திக் அப்புசாமி (மேற்கு), துணை செயலாளர் மகாலிங்கம் நகர செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.